அநங்கம் இதழ்- டிசம்பர் 2009



Sunday, January 31, 2010

அநங்கம்: புத்திமதிகளை மட்டும் உற்பத்திக்கும் ஆற்றலா இலக்கியம் என்பது?

அநங்கம் ஆறாவது இதழைச் சிறுகதை சிறப்பிதழாகக் கொண்டு வர வேண்டிய முயற்சியில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டதற்காக வருந்துகிறேன். மேலும் அநங்கம் மலேசிய தீவிர இலக்கிய இதழை இணைய மாத இதழாகக் கொண்டு வர வேண்டும் என்கிற முயற்சியிலும் ஈடுப்பட்டிருந்ததால் காலம் வரையறையின்றி என்னிடமிருந்து இடறியிருந்தன.

இந்தத் தடவை அநங்கம் சிறுகதை இதழுக்காக மொத்தம் 15 கதைகள் சீக்கிரமாகவும், மிகவும் தாமதமாகவும் வந்து சேர்ந்திருப்பது எப்படியிருப்பினும் தீவிர சிற்றேடுகளின் மீதான ஆர்வத்தையும் பங்களிப்புகளையும் காட்டுகிறது. ஆயினும் சில கதைகளை அடுத்த இதழுக்காகத் தவிர்க்க வேண்டியதாகப் போயிற்று.

சிற்றிதழ் வட்டத்தால் எந்தப் போதனைகளையும் எந்த அறங்களையும் எந்தப் பிரச்சாரங்களையும் வழங்க இயலாததால் பெரும்பான்மை சக்தி படைத்தவர்கள் சிற்றிதழ்களின் மீது தங்களின் வணிக மதிப்பீடுகளைக் கடக்க முடியாத போதாமைகளின் மூலம் விமர்சிக்க முயல்வது வேடிக்கையாக இருக்கின்றது. போதனைகளுக்கும் அறிவுரைகளுக்கும் கொஞ்சமும் வரட்சியில்லாத நமது சமூக சூழலில் இலக்கியத்தின் மொத்த ஆற்றலையும் பிறருக்கு அறமும் அறிவுரையும் மட்டுமே போதிக்கக்கூடிய விற்பனைக்காக விரயப்படுத்துவது இன்னமும்

இலக்கியத்திலிருந்து மீளாத வடிவமாக நிலைத்துவிட்டுருப்பதோடு இதுதான் இலக்கியம் என்கிற அங்கீகாரத்தையும் முன்வைப்பது இலக்கியத்தின் மீதான பரிணமிக்க முயலாத தேக்கத்தையே குறிக்கிறது.

காலப்போக்கில் இந்தத் தேக்கம் ஏற்படுத்த போகும் விளைவுகள் ஆபத்தானவை. இலக்கியத்தைக் கொண்டு குற்றங்களுக்கான பாரம்பரியமான புத்திமதிகளை உற்பத்தி செய்வதோடு ஒரு படைப்பாளியின் கடமை முடிவடைகிறது என்கிற புரிதல் நம் நிலப்பரப்பின் இலக்கிய ஆற்றலை ஒர் அறம் போதிக்கும் விற்பனை பொருளாக மட்டுமே காட்சிக்கு வைக்கப்போகும் நிலைமையும் எதிர்காலத்தில் உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. தற்போதைய படைப்புகளைப் பின்நவீனத்துவம், நவீனத்துவம் என்று வகைப்படுத்தி அதன் மீது புறக்கணிப்பைச் செலுத்தும் சிலர் அதற்கு அப்பாற்பட்ட இலக்கிய வகைகள் பற்றி கவலையில்லாமல், மரபின் நீட்சியில் படைப்பிலக்கியம் அடைந்திருக்கும் அடுத்தக்கட்ட உலக வளர்ச்சியைப் பற்றி அக்கறையில்லாமல் தீவிர இலக்கியத்தைப் பற்றி பரிச்சயமும் இல்லாமல் தமிழறிவைப் பெருமையுடன் பிதற்றிக் கொள்ளும்
மேடைவாதிகளாக மட்டுமே சமூகத்தில் மாலை மரியாதைகளுடனும் சிறந்த அங்கீகார சக்திகளாகவும் உலாவருகிறார்கள்.

சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், இதனையடுத்து சமூகக் குற்றங்களை அடையாளம் காட்ட முனைந்தது போதனை இலக்கியம் ஆகும். மு.வ போன்ற சீர்த்திருத்த எழுத்தாளர்களின் ஆளுமைகளுடன் இலக்கியம் இயங்கிய காலக்கட்டத்தில் சிந்தனை புரட்சி மங்கியிருந்த காலக்கட்டத்தில் சமூகத்தை அறத்தின் வழி கட்டமைக்கும் போதனை இலக்கியம் வடிவத்தில் உருவான சிந்தனைகள் வரவேற்க்கப்பட்டன.

அவரைப் பின் தொடர்ந்து அதே வடிவத்தைக் கையாளும் இலக்கிய ஆற்றல் பலரால் கையாளப்பட்டன. மு.வ-வின் எழுத்துக் காலம் முடிவடைந்தும் இன்னமும் கொஞ்சம்கூட அவர் உருவாக்கிய இலக்கிய பாணியை வளர்த்துவிடாமல் அதே பாணியைத் தக்கவைத்துக் கொண்டு எழுதி வருவது மலேசிய இலக்கிய ஆற்றலை ஒரு பின்னடைவிற்குள் முடக்கிவிடும் கடும் செயல் என்றே சொல்ல முடிகிறது.

தற்பொழுது அதிகமாக எழுதி குவிக்கும் ரமணிசந்திரன் போன்ற மெகா தொடர் எழுத்துக்குரிய வகைகளை எப்படி அணுக முடிகிறதோ அதே போலத்தான் வெறும் போதனைகளை இலக்கிய வடிவத்தில் அளித்து இன்னமும் சீர்த்திருத்த பள்ளிகளைப் போன்று இலக்கியத்தின் மீது ஆக்கிரமிப்பைச் செலுத்தி வரும் கும்பலின் அதிகரிப்பு உலக இலக்கிய வளர்ச்சியின் முன் மலேசிய இலக்கியம் அடையாளம் காணப்படாமல் காணாமல் போகக்கூடும் அபாயமும் உண்டு என்கிற வகையில் அணுக முடிகிறது.

சமூகத்தில் நிகழும் குற்றங்களையும் குற்றவாளிகளையும் அடையாளங்கண்டு அவர்களுக்குப் போதனைகளை உற்பத்திக்கும் ஆற்றலை இலக்கியம் எனக் கொண்டாடும் சிந்தனை மாறி, குற்றங்களின் அடிவேருக்குச் சென்று அதனைப் புதிய மதிப்பீடுகளுடன் விவாதிக்கும் ஆற்றலே தரமான இலக்கியம் என்று அடையாளப்படுத்தப்பட வேண்டும்.

ம.அ.சந்திரன் அவர்களின் மௌளனம் இதழில் பிரசுரமான சிற்றிதழ்களின் மீதான விமர்சனம் நவீன தமிழ் படைப்பிலக்கியத்தின் முன்னெடுப்பைக் கேலி செய்யும் வகையில் அவை பற்றி ஆழமான விவாதங்களும் கலந்துரையாடல்களும் ஏதுமின்றி உடனடி நிராகரிப்பைக் காட்டி வன்முறையாகச் செயல்பட நினைப்பது படைப்பிலக்கியம் மீதான அக்கறையின்மையைக் காட்டினாலும், இவர்களின் அக்கறையும் கவனமும் இல்லாமலும்கூட மலேசியாவில் உருவாகியிருக்கும் இளம் படைப்பாளிகளின் புதிய முயற்சிகளையும் மாற்றுச் சிந்தனைகளான படைப்பிலக்கியத்தையும் மேலும் வணிக நோக்கமின்றி நடத்தப்படும் சிற்றிதழ்களையும் வளர்க்க முடியும் என்பது நிச்சயம். எவர் போடும் அங்கீகாரத்திற்காகவும் புகழுக்காகவும் கூட்டத்திற்காகவும் ஏங்கித் தவிக்கும் பலவீனம் இலக்கியத்தை மட்டும் முன்னெடுக்கும் சிற்றிதழ்களுக்குக் கிடையாது.

-இதழாசிரியர் கே.பாலமுருகன் -